க்ராவிட்டியும் சித்ரகாரும்..

மீபத்தில் நீயா நானாவில் பெண்ணியம் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார்கள்…எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடிப்பவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி ஊடகத்துறை,கவிஞர் என சிலர் ஒரு குரூப்பாகவும் அதற்க்கு மாற்றான ஒரு குரூப்பும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்…பொதுவான ஒரு நிகழ்ச்சியில் ஒரு டாபிக்’ஐ எடுத்து பேசும்போது அது இரண்டு தரப்பும் என்ற ஒரு நிலைதானே தவிர பிரபலமானவர்கள், பிரபலமில்லாதவர்கள் என்ற பாகுபாடு கிடையாது இருக்ககூடாது...கோபி ஒரு தரப்பை பார்த்து இவர்களெல்லாம் யார்ன்னு தெரியுதான்னு கேட்கிறார்... அவசியமில்லாத விளம்பரம் இது...அதுபோக குட்டி ரேவதி என்பவர் இடையிடேயே ‘கோபி’ கோபி’ன்னு சொல்லி இடைமறித்து பேசும்போது அது ஒரு தரப்பினருக்கான நிகழ்ச்சியோ என்ற எண்ணம் வராமலில்லை... குட்டி ரேவதிக்கு கோபி தெரிந்தவரென்றால் ரோட்ல பார்த்தோ இல்ல வேற ஏதாவது நிகழ்ச்சியிலோ அப்படி கூப்பிட்டு பேசினால் அது நண்பர்கள் என்ற போர்வையில் போயிவிடும்.... இவர் கோபி’ கோபின்னு கூப்பிட்டு கூப்பிட்டு ஒட்டுமொத்த ஸ்கோப்பையும் எடுத்து கொள்வது சரியென படவில்லை பார்த்த பார்வையாளர்களுக்கு..
எல்லாந் தெரிந்த ஏகாம்பரம் போல் மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் அதிமேதாவித்தனம்தான் வெளிப்பட்டது அந்த பெண்ணியம் என்ற குரூப்பிலிருந்த ஒரு சிலரிடம்..இதில் கவிஞர் சல்மா உச்சமாய் ஒன்று சொன்னார் அது என்னான்னா’ கணவனுக்கு பிடித்த விஷயத்தை மனைவி செய்யும்போது மனைவியை கணவன் பாராட்டுவது அவளை அடிமைப்படுத்தும் முதல் படி என்றாரே பார்க்கலாம்... எனக்கு குப்பென்று வேர்த்து கப்பென்று தண்ணீரை குடித்தேன்...எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு பாருங்கள்..குடும்ப உறவில் இருக்கும் அந்நியோன்யம் நடிப்பு என்பதாக சொல்கிறார்...சேனல் மாத்திருக்கலாம்.. ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை இருக்கலாம்..ஒருத்தர் இன்னொருத்தரை அடிமைப்படுத்தும் நோக்கம் இருக்ககூடாது என்கிறது சமூகம்..இதுதான் தற்போது பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது...நல்லதுதான்... பூரிக்கட்டைகள் பறந்து வருவது கிச்சனிலேர்ந்துதானே ஒழிய ஹால்லேர்ந்து ரிமோட் பறந்து கிச்சன் போனதாக வரலாறில்லை...அன்னப்பூர்ணா சால்ட் விளம்பரம் வந்தாத்தான் அன்னமே கிடைக்குறது என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது.
லிங்கி (அ) கோலி…கண்ணில் ஏறியிருக்கும் கருப்பு நிறம்போல் கண்ணாடிகுண்டில் ஏறியிருக்கும் நிறங்களை பாருங்கள்..பதின்மத்தில் இதை தாண்டாமல் யாரும் வந்திருக்க முடியாது..கிடையாது..வட்டக்கோடு,பேந்தா பிரபலமான பலிங்கி விளையாட்டு பெயர்கள்..வட்டக்கோட்டில் தோற்பவன் அவன்கிட்ட இருக்கும் பலிங்கியை தரனும்..அப்படியும் அவன்கிட்ட பலிங்கி இல்லையெனில் கார்ரூவாய்க்கு தேன்முட்டாய் வாங்கி தரனும்.. அதிலும் கடன் சொல்லும் பக்கிகள் இருந்தார்கள்….

டவுசரை இருவிக்கிட்டே

‘டே நாளக்கி வாங்கித்தர்றேண்டா’

கடனுக்கு ஒரு கடன் என சைனா பெருஞ்சுவர் மாதிரி அது போய்ட்டே இருக்கும்.. தேன்முட்டாய் கொடலாய் மாறி குடலுக்குள் போகும் சமயத்தில்… சாலிடைர் டிவிதான் அப்போல்லாம்… சேனல் மாத்த ரெகுலேட்டரை திருவனும்.. 

டிடி நேஷனல்… புதன்கிழமை தோறும் தமிழ் பாட்டு போடுவார்கள் ஏமாந்து இந்தி பாட்டு பார்க்க பழகிவிட்டிருந்தோம்...சித்ரகார் அவ்ளோ லேசில் மறக்க முடியாத நிகழ்ச்சி... வெள்ளி தோறும் ஒளிபரப்பாகும் ஒலி ஒளியும் என்ற நிகழ்ச்சியையும் போடுறேன்னு ஏமாத்தி ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்ற போர்டும் சில சமயம் தொங்கும் தூர்தஷனில்...வயலும் வாழ்வை இப்போதெல்லாம் கிண்டலடிக்கிறார்கள்...எவ்ளோ அற்புதமான மண் சார்ந்த நிகழ்ச்சி அது.. நகரமயமாக்கலில் கேஎஃப்சியில் லெக் பீசை கடிச்சாலும் நம் நாட்டில் இன்னும் முதுகெலும்பு விவசாயம்தான்... புரியாத இந்தியில் சித்ரகார் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.. அப்பெல்லாம் டிவி சில வீடுகளில் மட்டும் இருக்கும்..அவங்க வீட்டுக்கு போய் பார்ப்பதில் அந்த வீட்டுக்காரவங்களுக்கு வெத்திலை சுண்ணாம்பெல்லாம் வாங்கிகொடுத்துதான் டிவி பார்க்க வேண்டியிருந்தது...ஒடுங்கி உட்கார்ந்து பார்ப்போம்.. முடிஞ்சிருச்சு முடிஞ்சிருச்சுன்னு அந்த வீட்டுக்காரர்கள் டிவியை ஆஃப் செய்ய வரும்போது ஒரு சோகம் வரும்பாருங்க.

சொன்னபடி மழை பெய்யும் ஜுன் ஜுலையில்…அவ்ளோ நல்லவர்கள் இருந்தார்கள்..சிறுவர்களுக்கு சிறுவர்களுக்குண்டான புத்தி இருந்தது..யுடர்ன் அடித்து நிற்கிறது தற்காலம்…சினிமா பார்க்க போறேன்னு சொன்னாலே தழும்பு வர்ற வரைக்கும் அடி விழும்… சாப்பாட்டுக்கு,ஸ்கூல் மிஸ்ஸுக்கும் வாயை தொறந்தத தவிர வேற எதுக்கும் அதிகம் தொறந்ததா ஞாபகமில்லை… அவ்வாறான ரமணன் வந்து அறிவிக்காத (அறிவிச்சுட்டாலும்..!) மழைக்காலத்தில் விளையாட்டு பலிங்கியிலிருந்து காகித கப்பலுக்கு மாறுகிறது… எவ்ளோ இயல்பான மாற்றம் பாருங்கள்… முறுக்கும் கடலைமுட்டாயும் மழைக்கால திண்பண்டங்கள்… காகித கப்பலுக்கு ரஃப் நோட்டு தாளை கிழிக்கும் பழக்கம் இருந்தது..எல்லோருக்கும் இருந்திருக்கும்.. ரெண்டா மடிச்சு கப்பல் வடிவில் அத்தாளை கொண்டுவந்து மழை சொட்டு சொட்டாய் டிங் டிங் என்று வடியும்..வீட்டு மாடியிலேர்ந்து சொட்டு சொட்டென்று ஒரு புள்ளியாய் மேலிருந்து தோன்று கீழே விழும்… வரிசையா பத்து பதினைந்து சொட்டுகள் வந்து விழும் மண்ணில்.. அச்சொட்டுகளில் இரண்டு சொட்டுகளின் நடுவே கைவிட்டு காகித கப்பலை லேசாக ஓடும் தண்ணீரில் விடுவோம்.. சில கப்பல்கள் கவுந்தும் விடும்.. அடுத்து வேறொரு பேப்பர்… இப்படியும் ரஃப் நோட்டின் இடுப்பு இளகும்…

கேப் சுருள் வெடிதுப்பாக்கி… தீபாவளி நேரங்களில் கடை தெரு அப்பியான் கடையில் குமுதத்தோடு தொங்கும்… ரெண்டு ரூவாக்கு கொஞ்சம் மட்டம், தரம் உயர்ந்தது அஞ்சு ரூபாய்… அஞ்சு ரூவாய் வாங்குறளவுக்கு எங்களின் தைரியத்தின் அளவு இல்லை…சில,பல கதவு உடைப்புகளுக்கு பிறகான கிடைக்கும் ரெண்டு ரூவாய் கைக்கு ஏறியதும் ஒரே ஓட்டமாய் ஓடி நிக்கிற இடம் அப்பியான் கடை.. துப்பாக்கியோடு கேப் சுருள் ரெண்டு மூணு தருவார்..அதுக்கு அடிஷனல் பத்து அல்லது அஞ்சு பைசாக்கள் வீதம் கொடுத்தாத்தான் கிடைக்கும்…அந்த கேப் சுருள் ஒவ்வொரு பொட்டாக துப்பாக்கியில் வைத்து பட் பட்’ன்னு வெடிப்போம்…வீட்டுல உள்ளவங்கள துப்பாக்கிய காட்டி பயமுறுத்துறது என அதகளம் அன்னாளில் செஞ்சிருக்கோம்…அதேபோல் கரும்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று..கடைத்தெருவுக்கு போய் வாங்கிட்டு வந்து தின்போம்.. நீள நீளமாய் சுவற்றில் சாய்த்து வைத்து விற்கும் வேட்டி கட்டிய கடைக்காரர்  இருப்பார்….இனிப்பு கம்மியான கரும்பென்றால் கடைக்காரனுக்கு வசவு வாய் நிறைய இருக்கும்…

‘நல்லா மெண்டு சாப்பிடு…பல் சுத்தமாவும்’ என்பார்கள் பெரியவர்கள்.. பொட்டிலடித்தாற்போல் ஞாபகம் இருக்கு எனக்கு இந்த டயலாக்….இனிப்பான கரும்பு சக்கையாய் போற வரைக்கும் விடுறதில்லை…கரும்பு அதிகமாய் தின்ற அன்னிக்கு பல்லின் மேல் முரசு நற நற வென இருக்கும்….ஒரு மாதிரி ஃபீல் அது…கரும்பின் ஒரு தட்டு முடியும்போது ஒரு கசப்பு சாம்ராஜ்யம் வரும்….அதை அகற்ற படும்பாடு இரு்க்கே சொல்லி மாளாது… கத்தியை கொண்டுவந்து வெட்டனும் அதுக்கு கத்தியை போய் அடுப்படியில தேடனும் தேடற நேரம் யாரும் இருக்ககூடாது அடுப்படியில் என பல வேகதடைகள் இருக்கிறது… எங்கும் அசையாத சோம்பேறிகள் பல்லாலேயே கடித்து துப்பிவிடுவார்கள்.. சிலருக்கு ரத்தமும் சேர்ந்து வரும்..இப்படி அந்த கசப்பு ஏரியா தாண்டியதும் இனிப்பு….ஜுப்பர்..


90’களில் யமஹா பைக் ஒரு கனவு எல்லோருக்கும்… கியர் வண்டிகளில் யமஹா தனி டைப் பைக்.. உர் உர் உர்ரென்று உறுமும் தன்மை பல பசங்களுக்கு பிடித்து போக காரணம்…டிவிஎஸ் சாம்ப்’யே பல வருஷம்? கற்று ஓட்டியவன் நான்…கியர் வண்டி என்றால் பத்தடி தூரம் நிற்கும் ரகம்..அப்படியாயினும் யமஹாவின் லுக்கும் உர் உர் உர்ரென்ற சவுண்டும் பிடித்தது என்னவோ தெரியலை… எப்படியாவது பழகிடனும் என்ற எண்ணத்திலேயே இருந்து கடைசிவரை முடியாமல் போய்விட்டது…நண்பனிடமிருந்தும் பழக தோன்றவில்லை…ஏனோ தவிர்த்து விட்டேன்… சமீபத்தில் சென்னையில் யமஹாவில் செம்ம ரவுண்டு அடித்து ஆசைகளை தீர்த்தாச்சு.. 


பேக்ரவுண்ட் ம்யூசிக்கை [BGM] கேட்பதில் அலாதி இன்பம்தான்… இளையராஜா தொடங்கி இன்றைய அநிருத் வரைக்கும் வெவ்வேறு வகையில் பிஜிஎம்கள் அப்படியே மயக்கும்…ரஹ்மான் பம்பாயில் கொடுத்த பிஜிஎம் இன்றளவிலும் கேட்க அவ்வளவு இனிமையா இருக்கும்.. ராஜாவின் தளபதி,ஆண்பாவம் பிஜிஎம்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை…இதில் லேட்டஸ்ட்டாக அநிருத் பட்டைய கிளப்பிட்டு வர்றார்… மூணு என்ற படத்தின் பிஜிஎம் அவ்ளோ பிரமாதமாக இருக்கும்…ரஹ்மான் ரிதம் பிஜிஎம் ரொம்ப ஸ்பெஷல்..மெல்லிசையாக அப்படியே மென்மையாகவே பிஜிஎம் கொடுத்திருப்பார்..இங்கே சில பிஜிஎம்கள் கொடுத்திருக்கிறேன்…கேட்டுட்டு சொல்லுங்கள்.

  

  

  

  

 


சிலர் எப்போதும் தன் மேல் கவனம் குவியனும் என்பதற்காக குட்டையை அல்ல கடலையையே குழப்புவார்கள்..அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் குழப்பிய விஷயம் எழுத்துரு..அதாவது தமிழை தங்க்லீஷில் எழுதி பழக சொல்கிறார்..மொழியை பொருள்பட உபயோகிக்க இந்த தங்க்லீஷ் உதவாது…இதற்கு மொழிப்பற்றாளர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்..என்னை பொருத்தவரை இந்த மாதிரி குழப்பம் விளைவிக்கும் எழுத்தாளர்களையும் புறக்கணிக்க வேண்டும் என்பதே..இவர் சினிமாவுக்கும் வசனமெல்லாம் எழுதுகிறார்…தமிழிலும் மலையாளத்திலும்…இதே மாதிரியான எழுத்துரு குழப்பத்தை மலையாள மொழியில் கிளப்பினால் அண்ணனுக்கு சேட்டன்மார்கள் யார் என்று தெரிந்திருக்கும்…ஆனால் தமிழந்தான் தமிழை/தமிழனை திட்றவனை ஆதரிப்பானே…இந்த ஜெயமோகனை முற்றிலும் ஒதுக்கிடனும்..இதெல்லாத்தையும்விட இவரது அடிப்பொடிகள் அல்லது ஏஜெண்டுகள் குறைஞ்ச பேர் சோஷியல் நெட்வொர்க்குகளில் இருக்கிறார்கள்…எங்கெல்லாம் ஜெயமோகனை கிழித்து தொங்கவிடுறாங்களோ அங்கெல்லாம் போய் வாந்தி எடுப்பதே இவர்களின் தலையாய கடமை…இல்லாங்காட்டி குருவுக்கு என்ன மரியாதை.. இந்தமாதிரி சபை குழப்பும் எழுத்தாளனுக்கு சப்பைக்கட்டிட்டு வரும் இவங்களை என்ன சொன்னாலும் பத்தாது..

ஷார்ட் ஃபிலிம்… சொல்ல வந்த விஷயத்தை ஷார்ட்டா சொல்லனும்…சுவராஸ்யமா இருக்கனும்..சலிப்பு தட்டக்கூடாது..இவ்விஷயங்களை பத்து அல்லது எட்டு நிமிஷ ஷார்ட் ஃபிலிம்களில் கொண்டுவர்றது அவ்ளோ சாத்தியமில்லாதது…அதையும் சாத்தியப்படுத்தி சிலர் ஜெயிக்கிறார்கள்..அதில் இந்த ஷார்ட் ஃபிலிம் அசால்ட்டாக தட்டிச்செல்கிறது… முடிவு சூப்பர்..



க்ராவிட்டி..ஒரு கற்பனையான திரைப்படமாக தோன்றவில்லை..விண்வெளியை நாம் நேரில் பார்ப்பது போன்றே திரைக்கதை அமைத்திருப்பது இதுவரை இல்லாத ஒன்று.. விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு இவ்வளவு முக்கியம் கொடுத்து ஒரு அறிவியல் விஷயத்தை இவ்வளவு ரசிக்கும்படி கொடுத்திருப்பதற்க்கு இயக்குனர் அல்ஃபோன்சா க்யூரன் தான் முக்கிய காரணம்.. ஜார்ஜ் க்ளூனி மற்றும் சாண்ட்ரா புல்லக் பிரதான கதாபாத்திரங்கள்.. முப்பரிமாணத்தில் (3D) பார்க்கும்போது பிரமிப்பாக இருப்பது விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு கிடைத்த வெற்றி… ஆரம்பித்த நேரத்திலிருந்து கடைசி வரை நம்மை எங்கும் போகவிடாமல் தடுக்கும் திரைக்கதை உத்தி… இந்த வருஷத்தின் சயின்ஸ் ஃபிக்ஷன் வரிசையில் முதல் இடம் இதற்க்குத்தான்… சுஜாதாவின் ‘வானத்தின் ஒரு மெளன தாரகை’ கதையில் இதே மாதிரியான விண்வெளி வீரர் தன் எந்திரத்தின் கோளாறு காரணமாக தொடர்பற்று இருப்பார்…பல உள்ளடி வேலைகளால் அவருக்கு உதவ மறுப்பதாக கதை முடியும்.. அதை படித்திருப்பவர்களுக்கு இந்த கதை விஷுவலில் புரியும்… 3டியில் பார்ப்பதே சிறந்தது…நார்மலில் பார்க்காதீர்கள்..அதில் அதன் முழுமையை அனுபவிக்கமுடியாது..

சூப்பர் சிங்கரில் எப்போதும் அருமையான பாடல்கள் படிக்கப்பட்டு இருந்தாலும் இந்த சிறுமி குரலில் இந்த பாடல் தேனாய் இனிக்கிறது..மெய்மறக்கலாம் நம்பி…அருமை…அருமை…
 

துல்லியமா கேட்ககூடிய ஹெட்செட்டை காதில் பொருத்திக்கொள்ளுங்கள்.. பக்கத்தில் இரைச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்… ஆவி பறக்க ஒரு கப் டீயை வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த ம்யூசிக்கை கேளுங்கள்… எட்டே நிமிஷத்தில் சந்தோஷம்,உற்சாகம்,சோகம்,நினைவலைகள் என நவரசங்களை பிழிந்து தருகிறது இந்த இசை… சான்ஸே இல்லை என்பேன்… கேட்டு முடிந்து இப்போ டீ’யை பருகுங்கள்..அந்த மாதிரி ஃப்ரெஷ் ஃபீலை அனுபவிக்கலாம்…
   


என்றும் அன்புடன்
A.அஹமது இர்ஷாத் 

Post Comment

4 வம்புகள்:

ஸ்ரீராம். said...

அப்பாடி..... இர்ஷ்... ஒரு பதிவில் எவ்வளவு விஷயம்? நல்லவேளை, நான் நீயா நானா எல்லாம் பார்ப்பது இல்லை! கோலி விளையாடிய நாட்கள் எனக்கும் நினைவில் இன்னும்! BGM எல்லாம் கேட்கவில்லை இர்ஷ்! ஷார்ட் பிலிமும் பார்ப்பதில்லை!

Ahamed irshad said...

நன்றிங்க ஸ்ரீராம்... சோஷியல் நெட்வொர்க் பெருக்கத்தால் பதிவு எழுதுறது குறைந்தேவிட்டது.. நமக்காக வாசிக்க வரும் ஒன்றிரண்டு பேருக்காவது நாம மெனக்கெடனும் இல்லியா...நிறைய மாசம் கழிச்சே இந்த பதிவு..அதான் இவ்ளோ நீளம் இவ்ளோ விஷயம்... பழைய விஷயங்களை யோசிச்சு எழுதறது அவ்வளவு இலகுவானதில்லை... ஒவ்வொன்றாக குறிப்பெடுத்து,தொகுத்து சுவராஸ்யம் குறையாத வகையில் பதிவேத்தனம்..இது ஒரு கலை...கஷ்டம்தான்... ஆனாலும் எழுதுவேன்..

'பரிவை' சே.குமார் said...

ஒரே பதிவில் எவ்வளவு விஷயங்கள்...
ஆஹா... அருமை.
வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

சே.குமார்...வருகைக்கு நன்றிங்க...

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates