ஜெம்ஸும் பத்தாத சட்டையும்..

Photo: SankaraNarayanan

மெரீனா..தமிழ்கூறும் நல்லுலகில் அனைவரும் போயிருக்ககூடிய சாத்தியம் இருப்பதால் எல்லோரும் அறிந்து இருக்ககூடிய நீளமான கடற்கரை..ஏற்கனவே போயிருந்தாலும் கடந்தமுறை போயிருந்தேன்..அடிக்கிற காற்றில் மட்டும் கலப்படம் இல்லை.. குதிரை சவாரி,சுண்டல் விற்பனை,ஐஸ்க்ரீம் என வழக்கமான காட்சிகள் ரிப்பிட்டேஷனில் தொடர்ந்து அடிக்கிறது கண்களை..தள்ளுவண்டியில் விற்கும் மாங்காய் கீத்துகளை பார்த்ததும் நாவில் சுவையேறி நாலு கீத்து வாங்கிட்டு ஐம்பது ரூபாயை கொடுக்க பரீட்சை ஹாலில் மாட்டிக்கிட்ட ஸ்டூடண்டை பார்க்கிற மாதிரி பார்த்தார் அந்தக் கடைக்காரர்..

‘என்னங்க’

‘எம்பது ரூவா சார்’

மாங்காய் மரத்துக்கும் சேர்த்த விலையை சொல்கிறார்..அவரும் அவர்க்கு பிடிச்சதை வாங்கும்போது அந்த கடைக்காரரும் பகீர் விலையை சொல்வார் இல்ல...அப்ப விளங்கட்டும்னு சொல்லி விட்டுட்டேன்..வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு வேற சொல்றாங்களே...மணலுக்கும் செருப்புக்கும் சரியான சண்டை, முடிவில் மணல் ஜெயித்து செருப்பு போட்டிருந்த எங்களை தன் மடியில் உட்காரவைத்தது செருப்பையும் தாங்கிக்கொண்டே... எங்கேயும் உட்கார முடியாதபடி ஆங்காங்கே மணலை அழுக்காக்கி வைத்திருந்தது மனித சமூகம்..பத்தாதுக்கு நாய் சமூகமும் ஆங்காங்கே ஒன்னாம் நம்பரும் ரெண்டாம் நம்பரையும் போயி மனுச பயலுவளுக்கு நாங்களும் சளைத்தவரில்லையென்று ‘வாசத்திலேயே அடிச்சி சொல்லியிருந்தது...

முட்டி வரை பனியன் போட்ட பையன் யாராவது சுண்டல் கொண்டு வருவானே என்று எண்ணியிருந்தபோது.... நிறுத்து... இது 2013 வருஷம் இன்னும் போன நூற்றாண்டுலேயே இருந்தா எப்படின்னு முட்டி பனியனை கடாசிவிட்டு டீசர்ட்டில் இருந்தான் ஒரு பையன்.. சுண்டல் வாங்கிட்டு அவன் போன பத்து நிமிஷம் சொச்சத்தில் பஞ்சுமிட்டாய்க்காரன் வந்துட்டான்..வாங்குற ஐடியா இல்லை என ஜாடையில் சொன்னேன்.. போய்ட்டான்..!! தொழிலுக்கு புதுசு போலிருக்கு.. குடும்பத்தோடு போனதால் மகனின் கேள்விக்கு பதில் சொல்லிட்டே இருந்தேன்.. ரெண்டு மணி நேர பவர்கட், இப்படி காத்தாட பீச் போன்ற செளகரியங்கள் சென்னைவாசிகளுக்கு.. பல கலர், பல அடையாளங்களோடு ஒரு மில்லியன் மக்களை அடக்கிகொண்டு பெரூமுச்சு விடுகின்றது சென்னை..
 -----------------------------------
திகாலை பறவைகளின் கூக்குரலும், நாய்களின் சோம்பல் முறிப்புகளும் பார்க்கப்பட்டு பழக்கப்பட்ட சமயங்களில் தினந்தந்தி வாங்க பிஎஸ் ஏ சைக்கிளில் மெயின் ரோட்டுக்கு போவேன்..போற வழியிலேயே பழஞ்செட்டி தெருவில் திமுக கரைவேட்டி கட்டிய சாத்தையன் தந்தி,தினகரன்,குமுதம் வெச்சிருப்பார்...அஞ்சே முக்கால் மணிக்கு காரைக்குடி போகும் ராஜா பஸ் வரும்..பட்டுக்கோட்டையிலிருந்துதான் பேப்பர் வரும்.. வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளின் தந்தி சீக்கிரம் வித்துப்போயிடும்.. இலவச இணைப்புகளுக்காகவே அப்படி..கலர்ஃபுல் சினிமா,இன்னபிற செய்திகளையும் கொஞ்சம் விலாவாரியாக,லோக்கல் செய்திகளை போடுவதாலும் தினந்தந்திக்கு முதலிடம்...கொஞ்சம் கலகலப்பான பார்ட்டிகள் தினமணி படிக்கமாட்டார்கள்.. ‘அது ஏம்ப்பா கரையான் அரிச்ச மாதிரி இருக்குது’ என்பார்கள்..பெரும்பாலும் மெயின் செய்திகளை மட்டும் பப்ளிஷ் செய்யும் தினமணி..வாஜ்பாயை வாஜ்பேயி என்றெழுதி பயமுறுத்துவார்கள்..தினந்தந்தி வெள்ளி மலர்க்கு மார்க்கெட் சலூனில் நான் நீ என்றிருக்கும்..அதேபோல் குடும்பமலருக்கும்..ஆக எப்படி பார்த்தாலும் தந்தியே முந்தி நின்றது உண்மை...அப்படி பேப்பரை வாங்கிட்டு கேரியரில் மடக்கி வெச்சிட்டு கெளம்பிடுவேன்..போற வழியில் சேர்மன்வாடி பஸ்ஸ்டாப் நாயக்கர் கடையில் ஒரு டீ..அந்த பஸ்ஸ்டாப்பில் குழவி புகையலை வெத்திலை சகிதமாக பெண்களும், செய்யது பீடியை புகைச்சுக்கிட்டே குந்தின மாதிரி உட்கார்ந்திருக்கிற ஆண்களை பார்க்கலாம் அந்த ஆறரை மணி வாக்கில்.. எல்லோரும் மேஸ்திரி,கொத்தனார்,சித்தாள்கள்..சரியாக எட்டு எட்டரைக்கெல்லாம் தஞ்சாவூர் போகும் பஸ்ஸு வரும்போது குருவிகூட்டில் கல்லெறிந்தது போல் அந்த கூட்டம் ஆளுக்கொரு திசையில் போயிருப்பார்கள் வேலைக்கு..

திரும்ப பத்து பத்தரை வாக்கில் மார்க்கெட்டுக்கு மீன் வாங்க போவேன்..எல்லா நாளும் அல்ல எப்பவாவது..பன்னா, கெழக்கன் என கூறுபோட்டு விற்பார்கள்...கூறுக்கு இருபது ரூபாய் என்றிருக்கும்..மீன் விஷயத்தில் ஜெனரல் நாலேட்ஜ் எனக்கு கம்மி...அழகாய் பளிச்சென்று இருக்கும் மீனை வாங்கிட்டு வந்து வீட்டுல திட்டு வாங்குவேன்.. இறால் என்றால் கொள்ளை ப்ரியம் [நம்ம ஊரு பாஷையில் ‘ராலு ] இங்கே கேஎப்ஸியில் இருபத்தி அஞ்சு ரியாலுக்கு இறாலோடு செவன் அப்பையும் சேர்த்து வைக்கிறார்கள்..படு திராபை.. இறால் பத்து ரூபாய்க்கு கூறு இருக்கும்..அடுத்த செக்‌ஷன் காய்கறி... தெரிந்தவர், ரொம்ப தெரிந்தவர் ரெண்டு கேட்டகிரியில் காய்கறிகடைக்காரர்கள் எனக்கு பழக்கம்.. தெரிந்தவரிடம் போனால் ரொம்ப தெரிந்தவர் முறைக்கிற மாதிரி இருக்கும்..இப்படி பல படிகளை கடந்துவிட்டு மீன் உள்ள கீஸ் பையை [ப்ளாஸ்டிக் பையை எங்க ஸ்லாங்கில் ‘கீஸ்’ பை என்றழைக்கிறார்கள்..இந்த வார்த்தை எப்படி வந்ததென பிறகு விளக்குகிறேன்] பைக் ஹேண்ட் பாரில் கொழுவிவிட்டு கிக்கரை உதைத்த கொஞ்ச நேரத்தில் போய் நிற்குமிடம் எம் பி சர்பத் கடை மெயின்ரோட்டில்..ரோஸ்மில்குக்கும் பாதாம்கீருக்கும் பேமஸான கடை அப்பெல்லாம்..வெயில் காலங்களில் கூட்டமிருக்கும்... அங்கே நின்று குடிக்காமல் பார்சல் வாங்கிட்டு போய்டுவேன்...ரொம்ப தாகம் அல்லது குடிச்சாகனும்னு மனசு சொன்னால் க்ளாஸில் குடித்துவிடுவேன்... பல நேரங்களில் மனசு சொல்வதை புத்தி கேட்பதில்லை.. இன்னொரு பார்சல் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து சட்டையை கழட்டிட்டு பனியனோடு நாற்காலியில் உட்கார்ந்து ஃபேனை அஞ்சுல வெச்சுட்டு உஸ்ஸுன்னு ஊதும்போது மணி பதினொன்னு அம்பதாகியிருக்கும்..மரம்,குளம் போன்ற இயற்கை பிரதிநிதிகள் ஊருக்கு மையத்தில் அமைந்திருப்பதால் வெயில் நேரங்களிலும் லேசான காற்று இருக்கும்..
-----------------------------------
பெரும்பாலும் சாயங்காலம் ஆறு மணியிலேர்ந்து ஏழுவரை வரை கொசுக்களின் படையெடுப்பு பயங்கரமாய் இருக்கிறது ஊரில்..ஓவர் சைஸ் கொசுக்கள்..பெண் கொசுக்கள்தான் கடிக்குமாம் (கொசுக்களிலுமா..!) பஸ்ஸ்டாண்ட்டை ஒட்டி தெரிந்தவர் கடையில் சாயங்கால நேரங்களில் நேரம் கிடைக்கும்போது போறதுண்டு..மணி ஆறரை இருக்கலாம்...பைக்கை ஓரங்கட்டிட்டு நின்று பேசிக்கொண்டிருந்தேன்..அங்கே என்னால் நின்று பேசமுடியாதளவுக்கு கொசுக்கடி..கடிதாளாமல் உடம்பை ‘வைப்ரேஷனில் வைத்திருக்கவேண்டிய நிலை.. அவர் சிரிச்சுக்கிட்டே,

‘நீங்களெல்லாம் ஃப்ரெஷ்ஷா வர்றீங்கள்ல அதான் டேஸ்ட் பார்க்குது’

அதாவது கொசு இல்லாத ஏரியாவில் இருக்கிறோமில்லையா அதை சொல்கிறார்... கொசுவுடைய கூட்டாளி முட்டை பூச்சி அங்கே இருக்கிறாப்டி...ஆக எங்க போனாலும் கடி உறுதி.. ரொம்ப ப்ராக்டிக்கலான மனிதர்.. பேச்சும் அப்படித்தான்..

‘அந்த புக்கு படிச்சியளா?’

‘எந்த புக்க சொல்றிய?’

‘அதான் விகடன்லேர்ந்து வருதே, பாஸ்னு வருமே’

ஆமா டைம்பாஸ்ன்னு ஒரு புக்கு வருது...அத படிச்சா என்ன படிக்காட்டி என்னங்க..சரியில்லையே’

‘அப்படி இருந்தாத்தான் புக்கு விக்குது..இப்பத்தான் எல்லாத்தையும் நெட்ல பார்த்துடுறானுவள... அதையும் மீறி புக்கு வித்தாவனும்ல... கொசுவத்தி விக்கனும்னா கொசு கடிச்சாவனும்ல.. அதே மாதிரிதான் இதுவும்ன்னார்...

மெலிதாக சிரிச்சேன்..இயல்பாய் பேசினாலும் கோபமும் ஆற்றாமையும் யாரையோ நோக்கி பாய்கிறது..

பவர்கட் பற்றி யாரிடமும் விசாரிக்க முடியாதளவுக்கு பெரும் அதிருப்தியை காண முடிகிறது எங்க ஏரியாக்களில்..அந்த கோபத்த எதில் காட்டுவார்கள் மிஞ்சிப்போனால் வர்ற எம்பி எலக்‌ஷனில் காட்டமுடியும்..அதுவும் கரண்ஸிக்கு மயங்கி அதே கட்சிக்கு ஓட்டுப்போடுறதும் நடக்கும்...மெட்ராஸிலே ரெண்டு மணி நேர பவர்கட்ன்னு அங்கே வாடகை வீட்டிலாவது குடியேற சில பேர் நினைக்கிறார்களாம்...சொல்றதுக்கு ஒன்றுமில்லை...அங்கே வீட்டு ஓனர்களை சமாளிக்கிறதுக்கு இங்கே கொசுக்கடிகளையே சமாளிக்கலாம்.. இப்படியாக எப்போதுமில்லாத அளவில் கடும் புழுக்கத்துடன் மக்கள் இருப்பது வேதனையான விஷயம்..கரண்ட் வர்றதை ஏதோ வாணவேடிக்கையை போல கொண்டாடுகிறார்கள் சிறுவர்கள்...பணம் படைத்தவனும் கஷ்டப்படும் சூழ்நிலை அங்கே...முன்னாடியெல்லாம் வாழ்க்கைக்கு தேவையான படிப்பு,சாப்பாடு போன்ற விஷயங்களுக்கு சம்பாதிக்கிறவர்கள் இப்போ இன்வெர்ட்டர் அதுவும் தரமான இன்வெர்ட்டருக்கு சேர்த்து சம்பாதிக்கோனும்...நிலைமை அப்படி..
-----------------------------------

கல் சாப்பாட்டு சமயங்களில் தஞ்சாவூரில் இருக்க நேர்ந்தால் நேராக சத்தார்ஸ்க்கு போய்டுறது என் வழக்கம்..பிரியாணியை விட பரோட்டாவில் டேஸ்ட் இன்னும் அதிகம்..பரோட்டா வித் சிக்கன் மஞ்சூரியன் அல்லது மட்டன் வகையோடு சேர்த்து சாப்பிடுகிற சுவை நன்றாக இருக்கும்.. பெரிய குறை சப்ளையர்கள் லேட்டாக சர்வ் பன்றது..வரவும் மாட்டேன் என்கிறார்கள்..வரும்போதே பிடிச்சிடனும்...விட்டா விக்கியிலேகூட பிடிக்கமுடியாது..நான் முன்னமே சொன்னதுதான்.. சாப்பாடு நல்லாயிருந்தா சப்ளையர்கள் சர்வீஸ் நல்லா இருக்காது, சப்ளையர்கள் பரீட்சை ஹாலில் வலம் வரும் வாத்தியார்மாதிரி சுத்தி சுத்தி வந்தால் சாப்பாடு அவ்ளோ விசேஷமாக இருக்காது...அப்படி இருந்தால் ரொம்ப ரேர்..மற்றபடி வேறெந்த குறையும் சொல்ல முடியாதபடி தனித்துவமா விளங்குகிறது இந்த ஹோட்டல்.
----------------------------------- 
லைவலி என்பது வியாதி இல்லை அது உடம்பில் ஏற்படும் சிம்டெம்ஸ்தான் என்கிறார் டாக்டர்.கீர்த்தனா..மனித வாழ்வில் ஆரோக்கியத்தில் என்னவெல்லாம் பின்பற்றினால் என்ன பலன்களை பெறலாம் என நிறை குறைகளை அலசுகிறது இந்த பேட்டி.. ’நேச்சுரோபதி’ [தமிழில்: இயற்கை மருத்துவம்] இதில் முக்கிய அம்சமே ‘வித் அவுட் மெடிசின்’ வகை.. அதாவது காய்ச்சலோ, தலைவலியோ,முட்டிவலியோ,தூக்கம் வராதது என எதற்க்கும் மாத்திரை மருந்துகளை எடுக்காதீர்கள் என்று சொல்லிவிடுகிறார்கள் இவர்கள்... இதில் சர்க்கரை வியாதி மற்றும் ஹை பிபி’க்கு மட்டும் விதிவிலக்கு...அதாவது மாத்திரை மருந்துகளை தொடரலாம் என சொல்கிறார் இவர்.. முப்பது நிமிஷம் ஓடக்கூடிய வீடியோவில் பல தகவல்களை மருத்துவ ரீதியான ஆச்சரியப்படுத்தும்படியாக சொல்கிறார்... மாத்திரை மருந்தில்லாமல் எப்படின்னு நானே யோசிச்சேன்..ஆனால் இவர்கள் சொல்ற வழிமுறைப்படி போனால் பாடாவதி மாத்திரை மருந்து இன்ஜெக்‌ஷன்களிலிருந்து விடுதலை... உங்களிடம் எவ்வளவு பீஸ் என்றெல்லாம் ஒரு டிவி ப்ரோக்ராமில் கேட்ககூடாதுதான் என்றாலும் இந்த சன்டிவி காரர்கள் கேட்கிறார்கள்..அதற்க்கு என்ன பதில் என்பதை அங்கே காண்க... தவறாமல் பார்க்கவேண்டிய காணொளி... தெளிவான உரையாற்றல்...பாமரனுக்கும் புரியக்கூடிய வகையில் விளக்கம் அளிக்கிறார் டாக்டர்...  

-----------------------------------

 நானெல்லாம் சீரியல் பார்ப்பேன்னு கனவில்கூட நினைச்சதில்லை.. பாடாவதி ‘தென்றல்’ என்ற சீரியல் பார்க்காமலும் இருக்கமுடிவதில்லை... அதற்க்கப்புறம் இப்ப விஜய் டிவியில் ‘ஆபீஸ்’ என்ற சீரியல் பார்த்து வருகிறேன்.. கொஞ்ச நாள் முன்பு இதன் டீசர் அடிக்கடி போட்டார்கள்..நல்லாருக்கேன்னு பார்த்தால் ஆரம்பம் எல்லாம் நல்லா இருந்தது, இடையில் ஒரு வில்லேஜ் கேரக்டரை கொண்டுவந்து படுத்தி எடுக்கிறார்கள்..மெதுவடை நல்லாருக்கேன்னு பார்க்க போய் லஞ்ச் சாப்பிட்டுட்டு வந்த கதையா போச்சு..இது பத்தாதுன்னு சேல்ஸ் டீம்’ன்னு ஒரு குரூப்பு அடிக்கிற மொக்கையில காது ஜவ்வு எல்லாம் கிழியுது.. தொடர்ந்து பார்க்க ஒரே காரணம் விஷ்ணு என்ற கேரக்டர்தான்..அந்த கேரக்டருக்காவது பார்க்கலாம்னு இருக்கேன்..
----------------------------------- 
பாத்ரூம்ல என்ன இருக்கிறது என்ற அறிவுப்பூர்வமான? கேள்வியோடு வரும் விளம்பரங்களுக்கு மத்தியில் இண்ட்ரெஸ்டிங்கா திரும்பவும் பார்க்க தூண்டும் சுவராஸ்யத்துடன் வந்த இந்த ஜெம்ஸ்’ விளம்பரம் வந்தாலே நான் சேனலை மாற்றுவதில்லை...எந்த வித லாஜிக் இல்லாமல் வரும் விளம்பரங்களுக்கு மத்தியில் இந்த விளம்பரம் அருமை... நீங்களும் பார்த்தால் திரும்ப பார்க்க தூண்டலாம்...பாருங்கள்..
   
----------------------------------- 
மீபத்தில் மனதை பாதிக்க செய்த புகைப்படம்:

கண்களில் தெறிக்கிறது குறும்பு பத்தாத சட்டையிலும்..



----------------------------------- 
அன்புடன்

அஹமது இர்ஷாத்

Post Comment

9 வம்புகள்:

இமா க்றிஸ் said...

very very நீ.....ளமா இருக்கிறதால அப்பப்ப மனசுல கமண்டுகளை அடுக்கிட்டே... வந்து, இங்க வர மறந்து போச்சு எல்லாம். ;)
ஆனாலும்... மொத்ததில் ரொம்பவே ரசிச்சேன். ஒரு முறை திரும்பவும் மெரீனா போய் வந்தேன். ஜெம்ஸ் சூப்பர். சொன்னமாதிரியே திரும்ப 2 முறை பார்த்தேன். ;) அப்றம்... வணக்கம் வைக்கிறது... சின்ன வயசு இர்ஷாத் தானே? ;)

இமா க்றிஸ் said...

ஹையா! நான்தான் ஃபர்ஸ்ட்டா! கிஃப்ட்டா ஒரு பாக்கட் ஜெம்ஸ் ப்ளீஸ்... ;)

ஸ்ரீராம். said...

1) இப்போ எல்லாம் தினமணி பேப்பர் புதுப் பொலிவுடன் இருக்கிறது! குறிப்பாக, ஞாயிறு தினமணி, கதிர்.

2) தஞ்சாவூர்ல சத்தார்ஸ் எங்கு இருக்கிறது? நான் பார்த்த ஞாபகம் இல்லையே!

3) குழந்தையின் படம் நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

tO FOLLOW

sabeer.abushahruk said...

இர்ஷாத்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வரிசையில் காத்திருந்து பழக்கப்பட்ட மக்கள்தான் நாங்கள், அதற்காக அலைவரிசையிலுமா? இருப்பினும் மிக அருமையான எழுத்தால் மிகச் சாதாரண நிகழ்வுகளைக் கூட சுவாரஸ்யப்படுத்தி காத்திருப்பை அர்த்தப்படுத்தி விட்டீர்.

கிரேஸி மோகி சுஜாதா எழுதியதுபோல இருக்கு. 

மெரினா பீச்சைப்பற்றிச் சொல்லும்போது என்னுடன் ஜாகிர் ஒட்டிக் கொண்டான். நம்மூரில் உங்கள் மோட்டர் பைக் ஆட்டோகிராஃபை விவரிக்கையில் பில்லியனில் நான். 

பளிச்சென்ற மீன் வாங்குபவர்களில் என்னையும் சேர்ர்க்கவும். 

உங்களுக்கு ரியாலில் தந்த க்கே எஃப் ஸி ராலை எனக்கு திர்ஹமில் தந்தார்கள். ஆனால், சாப்பிடும்போது ராலை அடைவதற்குள் அதைச் சுற்றியுள்ள பொறித்த மசாலாவைக் கடப்பது ஏதோ சகாராவைக் கடப்பதுபோல நீண்டு விடுகிறது. நம்ம வீட்டில் ராலை நிர்வாணமாகப் பொறித்துத் தருவார்களே அதற்கு ஈடாகாது.

அடிக்கடி எழுதுங்கள். இல்லையேல், துணைக்கு கோவாலு இல்லாமல் உங்கள் தளத்திற்கு வரமுடியாது என்னால்.

கலக்கல் பதிவு, வாழ்த்துகள்!

Ahamed irshad said...

இமா...நன்றிங்க கருத்துக்கு.. உங்களுக்கே ஜெம்ஸ் :)

ஸ்ரீராம்... இப்போது பொலிவுடன் இருக்கிறது தினமணி... காலத்திற்கேற்ப மாறியாகனுமே..

சத்தார்ஸ் ஹோட்டல் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டிலேர்ந்து வந்து மஹாராஜா சில்க் ஹவுஸ் பக்கத்திலேயே இருக்கிறது. உங்கள் கருத்துக்கு நன்றிங்க...

சகோ.சபீர்..
அலைக்கும் முஸ்ஸலாம்..

கமெண்ட்லேயே ஒரு ரவுண்டு போயிட்டு வந்துட்டீங்க... ரொம்ப சந்தோஷம்... நன்றி கருத்துக்கு...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யோவ்... (தம்பி), உன்னைய தானய்யா அங்கே தேடிகிட்டு இருக்கோம்... !

இப்புடியா ஊர் சுத்துவே !

என்னகு ரொம்பவே இஷ்டம்... கே.எஃப்.சி.இறால் ! (சுடச் சுட நாவுதான்)

dreamnabdubash said...

arumai

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates